Skip to content

திரு. உபயதுல்லா,தஞ்சை

திரு. உபயதுல்லா, தஞ்சை

ஒரு மாநில முன்னாள் அமைச்சர் இந்தத் திருக்குறள் தொண்டர் வரிசையில் வருகிறார் என்பது இத்தொகை நூலுக்கே பெருமையைச் சேர்ப்பதாகும். திருக்குறள் மாமணி மாண்புமிகு உபயதுல்லா தன்னுடைய எல்லா பணிகளோடும் திருக்குறளை அணிகலனாகவே அணிந்து செல்வார். அவர் எண்ணத்திலும் பேச்சிலும் திருக்குறள் அருவியாகவே வீற்றிருக்கும் கொட்டும். அதன் சாரலில் நனைந்த பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன். அவர் அமைச்சராவதற்கு முன்பும், நான் கல்வி அலுவலராவதற்கு முன்பும், திருவையாற்றில் நடைபெற்ற திருக்குறள் விழாவில் சந்தித்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை இப்படி ஒரு இசுலாமியரை அனைத்து மதங்களிலுமிருந்து அருமையான மேற்கோள்களைக் காட்டி பேசும் இயல்புடையவரைக்  கண்டதில்லை. திருவாசகத்தைப் பற்றி பேசும் இராமலிங்க அடிகளார் கூறியது போன்று, “நற்கருப்பஞ்சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து,செழுங்கனித்தீந்சுவை கலந்து, தெவிட்டாது  இனிப்ப”தை உணரமுடியும். பின்பு நானும் தஞ்சை மாவட்ட கல்வி அலுவலராகவும் அவர் அமைச்சராகவும் இருந்தபோதும் அதே அன்புடன் உறவாடி திருக்குறள் பரப்புரையை பல கூட்டங்களில் உரையாற்றி மகிழ்ந்தோம்.

ஒரு முறை நான் பரப்புரையில் கையாளும் திருவள்ளுவர் தட்டோட்டை அவருக்கு பரிசாக அளித்தபோது அவர் கண் கலங்கினார். எனது குரு சிவசூரியன் அவர்கள் இப்படி ஒரு தட்டோடு கிடைத்தால் மகிழ்வேன் என்று கூறியதால் நான் பல இடங்களில் அலைந்து கேட்டபோது கிடைக்கவில்லை. இதோ நம் மாவட்டக் கல்வி அலுவலர் (பெயரைச் சொல்லி அழைக்கமாட்டார்) கொண்டு வந்து கொடுத்துள்ளார். இதை என் குருவிற்கு காணிக்கையாக (அவர் இறந்து விட்டார்) ஒப்படைக்கின்றேன் என்றார்.

அதுமட்டுமல்ல அவர் ஒரு தி.மு.க. அமைச்சரவை அமைச்சராக இருந்தபோதும் எனது ஜெயா ஒளிபரப்பு பேட்டியைப் பாருங்கள் என தனது அன்பர்களுக்குக் கட்டளையிட்டார். இத்தகைய பண்பை அவருக்கு குறள் அல்லவோ  ஊட்டியது.

‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை’, ‘கெட்டுப் போகின்றவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை’ என்ற அண்ணாவின் வரியை எப்போதும் அவரும் கையாண்டு மற்றவர்களையும் கையாளச் சொல்லும் பண்பு  பாராட்டத்தக்கது , வணக்கத்துக்கு உரியது .

அந்தத் திருக்குறள் தொண்டர் இத்தொகுப்பின் வைரமாகவே மின்னுவர்! வளர்க அவர் தொண்டு!.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்