Skip to content

திரு. கொ. பெ. திருவரங்கன்,நங்கநல்லூர், சென்னை

திரு. கொ. பெ. திருவரங்கன், நங்கநல்லூர், சென்னை.

“திருவள்ளுவர் தெய்வ வழிபாட்டு இயக்கம்” என்ற பெயரை ஓர் அறிக்கையில் பார்த்த உடனே மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தேன். ஏனென்றால், அப்போதுதான் (2004)-ல் கேரள சிவானந்தரின் திருவள்ளுவர் கோவிலைப் பற்றி தினமணியில் படித்துவிட்டு அதே நினைப்பாக பேச்சாக செயலாக மாறியிருந்தேன். அந்நிலையில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக நாகையில் பணியேற்ற போது என் மேசையில் திருக்குறள் ஒட்டி ஒன்று வை. மா. குமார்  என்பவர் வெளியீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

அவரை அடுத்த சென்னைப் பயணத்திலேயே சந்தித்து வாழ்த்தியபோது தான் அவர் வாயிலாக திருவரங்கனும் அறிமுகமானார். மற்றவர்கள் எல்லோரும் திருக்குறள் பரப்புரையிலும், சொற்பொழிவுகளிலும் கவனம் செலுத்திய போது திருவரங்கன் மட்டும் தான் தன் வீட்டிலும் வெளியிலும் திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்ற வேண்டும் என்ற இயக்கம் நடத்திக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து எனது திருவள்ளுவர் ஞானமன்ற செயல்பாடுகளோடு திருவள்ளுவர் தெய்வ வழிப்பட்டு இயக்கமும் சேர்ந்து செயல்பட வேண்டுமென முடிவானது.

அதற்கு பிறகு நான் தஞ்சைக்கு மாறுதல் பெற்று சென்றதால் அங்கு திருவரங்கனாரை வரவழைத்து எனக்கு வழங்கப்பட்டிருந்த ஜீப்பிலேயே அவரை பல கோவில்களுக்கும் அழைத்துச் சென்றேன். மேலும், அவர் தொடங்க விரும்பிய “திருவள்ளுவர் தெய்வ வழிபாடு” என்ற திங்கள் இதழுக்கு பல நூறு சந்தாக்களை சேர்த்துக் கொடுத்து நானும் என் மனைவியும் புரவலராகச் சேர்ந்தோம். ஆனால் அவ்விதழ் ஈராண்டுக்குள் நின்றுவிட்டது. எனக்கும் அவரோடு தொடர்பு விட்டுப்போயிற்று. ஆனால் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தலைநகர்த் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்களும், சுந்தரராசனும் நீங்காத தொடர்புவட்டதில் இப்போதும் உள்ளனர்.

அவர் தற்போது வத்தலகுண்டுக்கு அருகே மூன்று ஏக்கர் இடம் வங்கி அதனை பொது அறக்கட்டளையாக்கி ஒரு தவச் சாலையை உருவாக்கி வருகிறார் என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் அவரோடும் மற்ற இயக்கங்களோடும் உறுதியாக சேர்ந்து செயல்பட முயல்வேன் என்பதே எனது திட்டம். அவரது அறக்கட்டளைக்கு நாம் அனைவரும் சென்று வருவோம்!

திருவள்ளுவரை தெய்வமாக வழிபடுவோம்!. வள்ளுவம் வழிப்படுவோம் !!

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்