Skip to content

தேம்பாவணியில் திருக்குறள்-2

முதல் காண்டத்தில் 12 படலங்கள் 1225 பாடல்கள் உள்ளன

பாயிரம் 13

காப்பிய நோக்கம், காப்பியத் தலைவன் குறித்துமூன்று பாடல்களும் ,அவையடக்கமாக 3 பாடல்களும் ,நூல் வந்த வழி குறித்து ஏழு பாடல்களும் உள்ளன .

1. நாட்டுப் படலம் 83
2. நகரப் படலம் 70
3. வளன் சனித்த படலம் 61
4. பால மாட்சிப் படலம்66
5. திருமணப் படலம் 160
6. ஈரறம் பொறுத்து படலம் 73
7. ஐயம் தோற்று படலம் 97
8 ஐயம் நீங்கு படலம் 96
9. மகிழ் வினைப் படலம் 133
10. மகவருள் படலம் 150
11. காட்சிப் படலம் 123
12. மகன் நேர்ந்த படலம் 100

நாம் முன்பே பார்த்தபடி , அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப் பொருள் நான்கு பற்றி உரைக்கவே தேம்பாவணி எழுந்ததாகக் கூறுகிறார் வீரமாமுனிவர்.

காப்பிய நாயகன் பெயர் ஜோசப் .வடமொழியில் சூசை தமிழ் மொழியில் வளன் . யோசேபு என்ற எபிரேயப் பெயர் தன் ஒலி அடிப்படையில் சூசைஎனப் பிற மொழிகளிலும், பொருள் அடிப்படையில் வளன் எனத் தமிழ் மொழியிலும் வழங்குகின்றது .

வளன் மாண்பு:
சூசை தன்னை வளப்படுத்தும் தெய்வ வரங்களால் எல்லை இல்லாத வளர்ச்சி அமைந்து, தன் உள்ளம் அதற்கேற்பச் செயலாற்றும் பெறுதற்கு அரிய மாட்சி உடையவர். அத்தன்மையைச் சொல்லும் முகமாக விரிவு கொண்டுள்ள வடநூற் புலவர் இவரை சூசை என்று அழைப்பர். அது நிறைவுகொண்ட தமிழச் சொல்லாலும் வளன் எனச் சொல்வதனைப் பொருள் அளவில் ஒத்ததே ஆகும்.

ஆகிர்த மரியாளின் மாட்சி:
சோலைகளால் அழகு வாய்ந்தது ஆகிர்த என்னும் நகரம். உலகத்தில் ஒப்புமை கடந்த புகழுள்ள வரங்களால் உயர்ந்த ஒரு கன்னிகை அந்நகர்க்குள் வாழ்ந்தாள். அவள் ஒழுக்கமாய் நடந்து, நிறைந்த தவத்தில்உயர்ந்து, ஆண்டவனைப் பெற்றெடுத்த அன்னை மரியாளின் பாதத்தை வணங்கி ,மேன்மை பெற்று இருந்தாள்.

அவள் ,குளிர்ச்சி தரும் விண்மீன்களிடையே ஒரு சந்திரனைப் போல,தன்னைப் போன்ற கன்னிப் பெண்களிடையே அரிய மாண்பால், அவள்உயர்ந்து விளங்கினாள்; அன்றியும், தன்னுள் பாவத்தைத் தரும் எவ்விதக்குறைபாடும் அற்று, வானவர் கூட்டத்திற்கு நம் தந்தையாகிய ஆண்டவன்வானுலகத்தில் வழங்கும் தெய்வக் காட்சியைத் தானும் அடைந்து, வேதம்
ஓதும் குருக்களுக்கும் ஒளி போன்று விளங்கினாள்.

பொறை உழி சிறப்பில் வாய்ந்த, புலன் தவிர் காட்சி தன்னால்,
அறை மொழி இனிமை கான்ற அருள் அவிழ் வாயினாளே;
நிறை மொழி மாந்தர் பூத்த நீர்மையோடு ஒழுகல் செய்து,
மறை மொழி வாய்மை காட்டும் மாண்பு உடை அறத்தினாளே.

அவள் இவ்வுலகில் சிறப்பாய் வாய்க்கப் பெற்ற, ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட தெய்வக் காட்சியினால், தான் சொல்லும் சொல்லில் இனிமை தோய்ந்த கருணை மலரும் சொற்களை உடையவள்; தத்துவப் பொருள் நிறைந்த சொற்களை உடைய முனிவர்களிடம் காணப்படும் புண்ணியஇயல்போடு நடந்து, வேத வாக்கின் உண்மையைத் தன் வாழ்க்கையால்காட்டும் மாண்பு கொண்ட அறத்தை உடையவள்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். ( குறள் 28)

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். (முவ)

இங்கே வள்ளுவத்தில் நீத்தார் பெருமையில் வரும் “நிறை மொழி மாந்தர்’ “மறை மொழி”என்ற சொற்களைப் பயன்படுத்தி, அவர்கள் வாழ்ந்து காட்டி, உலகிற்கு உணர்த்திய அறநெறியில் ஒழுகும் தூய கன்னி மரியாளை நம் கண்முன் நிறுத்துகிறார் வீரமாமுனிவர்.

இந்த நூல் வந்த வழியை குறிப்பிடும்போது , பரம தாய் அன்னை மரியாள் அருளால் ஸ்பானிய நாட்டு ஆகிருத நகரில் வாழ்ந்த ஆகிர்த மரியாள் என்னும் கன்னி மரியாள் இறைநகரம் (City of God) என்னும் நூலை, அன்னை மரியின் ஆணைப்படி எழுதியதாகக் கூறியுள்ளார். அன்னை மரியாளினால் , கன்னி மரியாளுக்கு உரைக்கப்பட்ட சூசையப்பரின் வரலாற்றையே தாம் நூலாக எழுதியுள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.

தொடர்ந்து பயணிப்போம்

வளரும் அன்புடன்
சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org