Skip to content

திரு. தங்கராசு,திருப்பூர்

திரு. தங்கராசு, திருப்பூர்

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தோழர் தியாகுவின் வழிகாட்டுதலில் தமிழ் வழி மழலையர்ப்பள்ளி தமிழ்நாட்டில் 40 இடங்களில் உருவாக்கின. ஆனால், இன்று 20 பள்ளிகள் தான் போராட்டத்தோடு இயங்குகின்றன. ஆனால், திருப்பூரில் நம் தங்கராசுவின் அறிய முயற்சியால், வெள்ளி விழாவை நெருங்கும் தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சிறப்பாக நடைபெறுகிறது. தோழர் தங்கராசு இதற்காகப் படும்பாடு சொல்ல முடியாது. பொதுவாகத் தமிழையும் குறிப்பாகத் திருக்குறளையும் உயர்த்திப்பேசும் பலரும் அடித்தளப்பணிகளில் ஈடுபடுவதில்லை. பெருமைக்காகவும் தம் திறனை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே பேசுவது. எங்கேயாவது எப்போதாவது கூட்டங்களில் கலந்து கொள்வது ஒன்றே போதும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், நமது பண்பாட்டு எதிர்ப்பாளர்கள் மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு செயல்படுவதால் தமிழ் நலிந்து வருகிறது . இந்த நிலையில் தங்கராசுவின் செயல் புரட்சிகரமானது என்றே சொல்ல வேண்டும். மிகவும் தரமான  நல்ல கட்டமைப்பு வசதியோடும் 300 மாணவர்கள் பயிலும் பள்ளியை நடத்தி வருகிறார். பள்ளியின் அறைகள் முழுவதும் திருக்குறள் வரிகள் மின்னுகின்றன. எளிய நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் நண்பர்களின் உதவியோடு இப்படி ஒரு பள்ளியை நடத்தி வருவதை ஊடகங்கள் இன்னும் அதிகமாக மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது எனது அவா.

அண்மையில் இப்பள்ளி வளாகத்தில் அற்புதமான திருவள்ளுவர் சிலையை நிறுவி சான்றோர்களை அழைத்து ஊர்ப்புறக்கலை விழாவோடு சிறப்பாக நடத்தியுள்ளார். திருக்குறள் கருத்துகள் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என நாம் எடுக்கும் முயற்சியில் முன்னோடியாக வர இசைவு தெரிவித்துள்ளார். நாங்களும் அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரத்தில் தாய்த்தமிழ் பள்ளி நடத்தி வருவதால் அவ்வப்போது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு.

தமிழ் நாட்டில் “திருக்குறளே மறை திருவள்ளுவரே இறை” என்ற முழக்கத்தில் . திருப்பூரை நம் பக்கம் திருப்புவதாக தங்கராசு இருப்பார். அவரை, தொண்டர் வரிசையில் சேர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்