Skip to content

திரு. தங்கபழமலை,திருக்கோவலூர்

திரு. தங்கபழமலை, திருக்கோவலூர்.

திருக்கோவலூர் அங்கவை சங்கவை பெண்கள் மேனிலைப் பள்ளியில் மிகப்பெரிய சிலையாக (6 அடி அமர்ந்த நிலையில் ) திருவள்ளுவரைப் பார்க்கும் எவரும் வியந்து போவார்கள். அந்த சிலை அமையத்  தூண்டுதலாக நான் இருந்தேன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

நான் 2005 இல் நாகையில் மா.தொ.க. அலுவலராக இருந்தபோது தங்கபழமலை சுற்றறிக்கை ஒன்றைப் பார்த்தேன். 500 நண்பர்களிடம் 1000 ரூபாய் வீதம் திரட்டி திருவள்ளுவர் கழகம் ஒன்றை நிறுவி பல போட்டிகளையும் நடத்தி பரிசுகள் வழங்குவதை பத்தாண்டுகளாக செய்து வந்துள்ளார். அடுத்த சில வாரங்களில் திருக்கோவலூரை நோக்கி என் பயணம் அமைந்தது.

தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராயிருந்து ஓய்வு பெற்று திருக்குறள் அமைப்பொன்றை நிறுவி திருக்குறள் பரப்புரைச் செய்தவர். வள்ளலார் மீது கொண்ட  பற்றால் திருவருட்பாவை சிறு நூல்களாக வெளியிட்டு வந்தார். அவரது திருக்குறள் திருவிழாவில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்த நான் அவரிடம் நூல்களை இலவசமாக தருவது, பரிசளிப்பது பாராட்டுவதெல்லாம் சரிதான். ஆனால், திருக்கோவலூரில் உங்கள் முயற்சியில் திருவள்ளுவர் சிலை எழுப்புங்கள். அது எல்லாக் காலத்திலும் உங்கள் புகழை நிலை நிறுத்துமென்று சொன்னேன்.

முதலில் மறுத்தபோது நான் சொன்னேன் “பொது இடத்தில் வைப்பதைவிட திருவள்ளுவர்க்கென்று ஓரிடத்தை வாங்கி (5 சென்ட்டாவது) திருவள்ளுவர் சிலை நிறுவுவதோடு அது குறித்த உரையாடல்கள், காலை நிகழ்சிகள் எல்லாம் நடத்தி மக்களிடம் திருக்குறளைக் கொண்டுச் செல்ல முயல்வோம்” என்றேன். அதையும் மறுதலித்து சொன்ன அவர் மூன்று ஆண்டுகளில் நான் சொன்ன நிலைமையை உணர்ந்து 5 இலட்சம் ரூபாய் செலவிட்டு அங்கவை சங்கவை பள்ளியில் நிறுவிவிட்டார்.

ஆனால், தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் வாய் மொழியாக கட்ட அனுமதி தந்த அலுவலர்கள் மாறுதலில் சென்றுவிட்டதால் புதிதாக வந்தவர்கள் சிலையை திறக்க அனுமதிக்கவில்லை. முறையான அனுமதியை கல்வித்துறையில் வாங்காதது தவறுதான். என்னிடம் அவர் அனுமதி வாங்கி விட்டதாகக் கூறியதை நானும் ஆய்வு செய்யாமல் விட்டுவிட்டேன். விழாக்கள் இல்லாமல் போனாலும் சிலையின் அமைப்பு திருக்கோவிலூருக்கே அடையாளமாகிவிட்டது.

அவர் 2010 இல் மறைந்தபிறகு செயலர் உதயனும் பழமலையரின் மகனும் சேர்ந்து தொடர்ந்து விழா நடத்தி வருகின்றனர் என்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது.

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்