Skip to content

திரு. ஆ. சிவானந்தர்,வாரப்பட்டி, மூவாற்றுப்புழா, கேரளா

திரு. ஆ. சிவானந்தர், வாரப்பட்டி, மூவாற்றுப்புழா, எர்ணாக்குளம், கேரளா

“ஆதிபகவான் திருவள்ளுவர் ஞானமடம்” என்னும் திருக்குறள் வாழ்வியல் நிறுவனத்தை கேரளா மாநிலம் பூம்பாறை என்னும் ஊரில் கடந்த 1975 ஆம் ஆண்டில் நிறுவியவர். இவர், எளிமையான தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக இருந்து இன்று வாழும் திருவள்ளுவராக உயர்ந்துள்ளவர்.2019 இல் மறைந்துவிட்டார் . தமிழ் மொழி பேசும் மூணாறு பகுதியில் வாழ்ந்தபோது தேநீர்க்கடை நடத்தும் ஒரு தமிழரால் அறிவுக்குளியல் (ஞானஸ்நானம்) பெற்றவர்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளால் தெளிவு பெற்று திருக்குறள் ஒன்றே மனிதனை மகத்தானவனாக மாற்றும் வல்லமை பெற்றது என்பதை உணர்ந்து தானும், தான் மனைவியுமாக சேர்ந்து தான் தொழிலையும் விட்டு கேரள ஆதிசங்கரரை போல பரப்புரை செய்தார். ஏறத்தாழ 5 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் மடங்களை உருவாக்கி மக்கள் பேசும் மலையாளத்திலேயே திருக்குறளை கற்கச் செய்து அதன்படி நிற்கச் செய்துள்ளார்.

பிறப்பு, திருமணம், தொழில், இறப்பு என எல்லா நிலையிலும் திருக்குறளை ஓதியும், திருவள்ளுவரை வழிபட்டும் வாழ பழக்கியுள்ளார். இந்த அமைப்பின் செயலாளராக மணி என்பவரும் மற்ற நிர்வாகிகளும் சேர்ந்து பல ஊர்களில் பரப்புரை செய்து வருவது தற்போது தான் மலையாள மொழி அறிஞர்களுக்குத் தெரிய வந்து பரவிவருகிறது.

அண்மையில் நடுவண் அரசின் கல்வி அமைச்சர் ஸ்மிரிதி. இராணி பல்கலைக் கழக மானியக் குழு மூலம் வெளியிட்ட அறிவிப்பால் இந்தியாவில் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் திருக்குறள் குறித்த போட்டிகள் சொற்பொழிவுகள் நடத்தத் தொடங்கியுள்ளனர். அந்நிகழ்வில் சிவானந்தர் உருவாக்கிய திருவள்ளுவர் ஞானமடத்தைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறார்கள் என்பது மகிழ்ச்சியளிகிறது.

தமிழர்களாகிய நம் திருக்குறளைப் படித்து பெருமை பேசுவதோடு வாழ்வியலாக்க முற்படுகிறோம் வாரீர்!

திருக்குறள் திருத்தொண்டர் வரிசையில் என்னை மாற்றிய சிவானந்தரையே முதன்மையானவராகக் குறிப்பிடுவது பொருத்தம் என்று கருதுகிறேன்.

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்