Skip to content

திரு. க. செங்குட்டுவன்,கரூர்

திரு. க. செங்குட்டுவன், கரூர்.

அப்பரடிகள் மீது கொண்ட அளவற்ற பற்றால் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் என்றே தன்  பிள்ளைகளுக்கும் நிறுவனங்களுக்கும் பெயர் சூட்டி மகிழ்ந்தார் என்பதை சேக்கிழாரின் பெரியபுராணம் சொல்கிறது. அதுபோல கரூர் நகரில் தான் நடத்தும் கல்வி நிறுவனங்கள், விடுதிகள், வணிக நிறுவனங்கள் என  அனைத்திற்கும் வள்ளுவர் பெயரைச் சூட்டி கரூரையே வள்ளுவர்புரமாக மாற்றி வருகிறார் செங்குட்டுவனார்.

அவரை தமிழறிஞர் வா.மு. சேதுராமனுடன் முதலில் சந்தித்தபோது மென்மையான குரலில் திருக்குறள் பிறந்த ஊரில் ஊழலும், ஒழுக்கக்கெடும் மலிந்து கிடக்கிறதே. தமிழையும் திருக்குறளையும் பேசிய தமிழ் மக்களே  இதற்கு காரணமாகிவிட்டார்களே என வருந்திய போது நான் அதிர்ந்துபோனேன். தமிழ்க்கதில் முற்றிலும்  குறளாட்சி நடக்க வேண்டும் எனக் கனவு காண்பதுமட்டுமல்ல அதற்காகவே அயராது  பாடுபட்டும் வருகிறார் .

செல்வமும், செல்வாக்கும் உள்ள செங்குட்டுவனார் சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டு இந்தத் தமிழகம் தலை நிமிருமா என்று வினா எழுப்பியபோது ஒரு சரியான திருக்குறள் தொண்டரை அடையாளம் கண்டு கொண்ட அகமகிழ்ச்சி ஏற்பட்டது.

அப்போது நான் வைத்த சில கோரிக்கைகளை பிறகு பரிசீலிக்கிறேன் என்றவர் படிப்படியாக நிறைவேற்றி இன்று தமிழகம் முழுவதுமுள்ள திருக்குறள் இயக்கங்களை இணைக்கும் “திருக்குறள் பேராயம்” ஒன்றை நிறுவும் அளவுக்கு நெருக்கமாகியுள்ளார். நான் கேட்டுக் கொண்ட ஒரு திருக்குறள் ஒட்டியை அச்சடித்து அதனை நூறு பள்ளிகளில் விநியோகம் செய்து இந்த யோசனையைச் சொல்லி எனக்குப் பாராட்டும் தெரிவிக்கச் செய்தார்.

மூன்றாவது மேற்கு மண்டல ஒருங்கிணைப்பு மாநாட்டிற்கு அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். ஆனால்,  அப்போது முன்னாள் முதல்வர் கைதானதை ஒட்டி நிலவிய சற்று பதட்டமான சூழ்நிலையால் மாநாடு முழுமையாக நடைபெற முடியவில்லை. ஆயினும், தொடர்ந்து நான் கூறியவாறே ஒன்றுக்கு இரண்டாக மிகப் பெரிய திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார். அதில் ஒன்று 5 அடிக்கும் மேலான ஐம்பொன் சிலை.

தன் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சேமிப்புப் பழக்கத்தை உண்டாக்கி தங்கள் கால்களிலேயே நிற்கும் துணிவை உண்டாக்கி வருகிறார். இவரது பணிகளை விரிக்கின் பெருகும். ஆயினும், இத்தொகை நூலில் இவரைத் தொடாமல் இது நிறைவுறாது என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்!

செங்குட்டுவன் பணிகள் வெல்ல நாம் அனைவரும் குரல் கொடுப்போம்!

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்