Skip to content

திரு. பா. இரவிக்குமார், சென்னை

திரு. பா. இரவிக்குமார், வளசரவாக்கம், சென்னை

இவர் “குறள்மலைச் சங்கம்” என்ற அமைப்பை 17 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கி ஒரு மலைக்குன்று முழுவதும் 1330 அருங்குறள்களையும் பொருள் விளங்க கல்வெட்டாக வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுபவர். இத்தொகுப்பில்  இடம் பெறுகிறார். ஏனென்றால், நம் அனைவரும் பேசும் பேச்சு காற்றாலும், காலத்தாலும் அடித்துச் செல்லும் வாய்ப்புள்ள நிலையில் இவரது திருக்குறள் கல்வெட்டுக்கள் காலத்தால் அழியாது என்பதால் தான்.

இதற்காக இவர் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியின் ஆழமும், அகலமும் தெரியாமல் எளிதாக பதில் சொல்பவர்களையும் நன் பார்க்கிறேன். மிகப் பெரிய அளவில் பெருவள்ளல்கள் எடுத்துச் செய்ய வேண்டிய பணியை நடுத்தர வகுப்பைச் சேர்ந்த இவர்கள் தான் திரைத்துறையில் ஈட்டிய பொருளை எல்லாம் இழந்தும் தளராமல் முயன்று வருகிறார். அதனால் இவருக்கு ஏற்படும் சோர்வைப் போக்க சில ஆறுதல் பணிகளை நானும் செய்து வருகிறேன். அதுவே எனக்கு மனநிறைவைத் தருகிறது.

இவர் எடுத்துக் கொண்ட கல்வெட்டுப் பணி நடைப்பெறும் இடம். இவர் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலைப்பாளையம் என்பதாகும். மேதகு. அப்துல் கலாம், அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை, நீதியரசர் மகாதேவன், சிற்பி பாலசுப்ரமணியம் உட்பட பலர் பாராட்டி வாழ்த்தினாலும் இதற்கு செலவுத் தொகை ரூ.50 கோடி என்பதால் மலைப்பாகவே இருக்கிறது. ஒரு குறள் வெட்ட நான்கு இலட்சம் தேவைப்படுகிறது என்றாலும் குறளால் தெளிவுப்பெற்று போராடுகிறார். திருக்குறள் தொண்டராகிய இவருக்கு நாம் கை கொடுத்து உதவவேண்டும்.

திருக்குறளைத் தூக்கிப் பிடிப்போம். திருக்குறளால் உயர்வடைவோம். “திருக்குறள் மலைச் சங்கம்” வெற்றிபெற நாம் பங்களிப்போம்.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்