Skip to content

திரு. அ. இராமசாமி நூற்றாண்டு நினைவு (23/06/1923 – 06/12/1982)

திரு. அ. இராமசாமி  (23/06/1923 – 06/12/1982)
நூற்றாண்டு நினைவு

மதுரைக்கு அருகில் உள்ள புதுத் தாமரைப்பட்டி என்னும் கிராமத்தில் 1923ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளிப்படிப்பை முடித்து திரு.அ.இராமசாமி அவர்கள் பட்டப் படிப்பிற்காக அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தார். இந்திய மக்கள் காந்தியடிகளின் தலைமையில் அகிம்சை வழியில் நடந்த விடுதலைப் போராட்டத்தின் காலம் அது. காந்தியின் கொள்கைகளை முக்கியமாக அவருடைய பொருளாதாரக் கொள்கைகளை நன்கு கற்றுக் கொண்டு காந்தியமே எதிர்காலத்தின் நம்பிக்கை என்று முடிவு செய்து மக்களிடையே அதை பரப்புவதற்கு அவர் தீவிரமாக முனைந்தார். அப்பொழுதே கதர் ஆடை அணியத் துவங்கி இறுதி வரை அவ்வாறே அணிந்தார். பேச்சாற்றலில் மிகவும் வல்லவராக இருந்த அவர், கும்பகோணத்தில் நடந்த, கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். பின்பு பத்திரிக்கைத் தொழிலில் பணிபுரிந்த பொழுது அதன் மூலமாகவும் காந்தியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார்.

“மதுரை காந்தி” என்று மக்களால் போற்றப்பட்ட திரு.N.M.R. சுப்புராமன் அவர்கள் தலைமையில் தொடங்கிய மதுரை காந்தி மன்றத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். மதுரை வைத்திய நாத ஐயர் தலைமையில் ஹரிஜன மாணவர் நலத்திற்காக “ஹரிஜன சேவா சங்கம்” ஏற்படுத்தப்பட்டது. அந்த சங்கத்தின் செயலாளராகவும் பல ஆண்டுகள் திரு.அ.இராமசாமி அவர்கள் பணியாற்றினார்.

இளவயது முதற்கொண்டு காந்திய நெறிகளில் பற்றுக் கொண்டு அதன்படி வாழ்க்கை நடத்தியவர். பத்திரிக்கையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 1963-1966ஆம் ஆண்டுகளில் மதுரை காந்தி
நினைவகம் நடத்தி வந்த ‘கிராம இராஜ்யம்’ என்ற வார இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

காந்தி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக 1966இல் ஒவ்வொரு மாநிலத்திலும், அந்த மாநிலத்திற்கும் காந்திக்கும் உள்ள தொடர்பை ஒரு நூல் வடிவில் கொண்டுவர இந்திய அரசு முடிவெடுத்தது. தமிழ்நாட்டில் இந்நூலை எழுதுவதற்காக திரு.அ. இராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நூலை எழுதி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆயின. தனி மனிதராக காந்தி தமிழ் நாட்டில் எந்தெந்த ஊர்களுக் கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் சென்று மக்களை சந்தித்து செய்திகள் சேகரித்தார். தமிழ்நாட்டில் காந்தியை சந்தித்த பெரும் தலைவர்களையும், அறிஞர்களையும் சந்தித்து விபரங்கள் சேகரித்தார். ‘தமிழ்நாட்டில் காந்தி’ 1969ஆம் ஆண்டில் முடிக்கப் பட்டது.

இந்நூலைத்தவிர திரு.அ.இராமசாமி அவர்கள் காமராஜர், நேரு மாமா, விவேகானந்தரின் அடிச்சுவட்டில், ஐக்கிய நாடுகள் சபை, எல்லையில் தொல்லை, ரமணரும் காந்தியும், உணவுப் பிரச்சினை ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். 1969ஆம் ஆண்டு திரு. அ. இராமசாமி அவர்கள் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அந்த இதழின் ஞாயிறு பதிப்புடன் இணையாக வரும் ‘தினமணி சுடரில்’ தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். அதில் குறிப்பிடத்தக்கது “காந்தியும் குறளும்” ஆகும்.இந்த நூல் “காந்தியின் கட்டளைக்கல்” என்ற பெயரில் 2022 ஆம் ஆண்டு சந்தியா பதிப்பகம் வெளியிட்டது

தொகுப்பு
சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org