Skip to content

வள்ளுவம்

Category:
திருக்குறள் நூல் அறிவோம்
வள்ளுவம்
(அறத்துப்பால் 380 குறட்பாக்களுக்குமான கவிஞர் வாலியின் வசன கவிதை)
கவிஞர் வாலியின் முன்னுரை
அடியேன் வெறும் கருவி , ஆவினன் குடிப் பெருமான்தான் கர்த்தா , எல்லாப் புகழும் எம்பிரானுக்கே !.. வாலி
முப்பாலில் முதற்பாலை மட்டுமே எழுதி முடிக்க எனக்கு மூன்று ஆண்டுகள் ஆயின. சில இடங்களில் எதுகையும் ; சில இடங்களில் மோனையும் – தழுவப்பெற்றும் தவிர்க்கப்பெற்றும் எழுதப் பெற்ற இந்த வசன கவிதைகள் – பெரும்பாலான இடங்களில் என்னுடைய பாணியில் இயைபுத் தொடைகளை ஏற்றுப் பிறங்குகின்றன .
பாதிக்குமேல் வசனமாக இருந்தால்கூட – கவிதைக்கு உரிய ஒரு மயக்கத்தை வாசகருக்கு வழங்கவும் – அதே நேரத்தில் சுலபமாக நினைவுகொள்ளவும் துணைநிற்பவை இயைபுத் தொடைகள்  என்பது எளியேனின் கருத்து .
சமத்காரமாகச் சொற்களைப் பிரயோகித்து ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தினாலும் இந்த வசன கவிதைகளின் உள்ளீடும் இறைச்சிப் பொருளும் கனமானவை. சொற்சிலம்பம் ஆடினாலும் கருத்துக்களுக்குக் காயம் ஏற்படாமல் கவனமாக எழுதப்பெற்றவை .
பரிமேலழகர் முதலிய மூத்தோர் உரைகளைப் பின்பற்றி – தற்கால உரைகாரர்களின் விளக்கங்களையும் உள்வாங்கி – இந்த ‘ அறத்துப் பாலை’ – என் பாணியில் நான் புனைந்திருக்கிறேன் .
இதை எழுதிவிட்டு எனக்கு நானே என் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்ளாமல் – பல்வேறு தமிழறிஞர்களின் பார்வையில் வைத்துச் செப்பனிட்டிருக்கிறேன் . அப்படி – இந்த என் நூலுக்கு – நான் உரை கற்களாய்த் தேர்ந்து , இதன் ‘ மாற்று ‘ எவ்வளவு எனத் துல்லியமாய்த் தெரிவிக்க –
மரபுக் கவிகையிலும் , புதுக்கவிதையிலும் , எல்லாவற்றிற்கும் மேலாக செழுமையான இலக்கண அறிவிலும் மேம்பட்ட வர்களையே துணைக் கொண்டேன் . அவர்கள் தமிழிலும் நல்லுகத்தால் அறிஞர் பெருமக்கள் என்று ஆராதிக்கப் பெற்றவர்கள் .
திருப்பனந்தாள் தமிழ்க் கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவரும் இன்னோர் உ.வே.சா. எனப் பிறங்கிய தமிழ்க் கொண்டல் திரு . கா . வேங்கடராமையா அவர்களின் புதல்வரும் ஆன மாப்புலவர் திரு . ம.வே. பசுபதி அவர்கள் வரிக்குவரி இந்த நூலைப் பார்த்து ஒப்புதல் அளித்த பிறகே – இதை அச்சிடத் துணிந்தேன் .
அதேபோல் –
முன்னாள் அரசவைக் கவிஞரும் – பிரபல திரைப்படக் கவிஞரும் எல்லாவற்றிற்கும் மேலாக – என் எழுத்துகளுக்கு நான் உரைகல்லாக மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கும் நடுநிலைமை நோக்குக் கொண்ட என் இனிய நண்பரும் ஆன – திரு . முத்துலிங்கம் அவர்கள் – இந்தப் படைப்பில் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி என்னை ஊக்கப்படுத்தியவர் ஆவார் .
அதுபோல் பிரபல பிரவசனகர்த்தாவும் , தமிழக அரசின் பாரதி விருது பெற்றவரும் , மிகச் சிறந்த கவிஞரும் ஆன – திரு . மதிவாணன் அவர்களும் இந்த நூல் பிழையற வெளிவர வேண்டுமென்று பெரிதும் பிரயாசைப்பட்டவர் ஆவர் .
 கவிஞர் பெருந்தகை , மிகச் சிறந்த இலக்கியச் சொற் பொழிவாளர் ; பல விருதுகள் பெற்ற பாவலர் ; திரு . ஞானச்செல்வன் அவர்களும் என் பொருட்டு தன் நேரத்தைச் செலவிட்டு இந்நூல் செம்மையாகப் பிறங்கத் துணை நின்றவர் ஆவார் . சென்னை வானொலி நிலையத் துணை இயக்குநரும் திருமயிலைத்
திருவள்ளுவர் கழகத்தின் வாயிலாகக் குறள்பணி ஆற்றும் அறிவார்ந்த பெருமகனும் உயரிய பண்புகளின் உறைவிடமாகத் திகழ்கின்ற நல்ல மனிதரும்  டாக்டர் திரு . சேயோன் அவர்களும் , இந்த நூல் சிறப்புற வெளிவர உடனிருந்து உதவியவர் ஆவார் . மேற்சொன்ன ஐவரும் – என் ஐந்து விரல்களாக இருந்து – இந்த நூலின் உள்ளீடு சிஷயாமல் காத்த பெருமக்கள் ஆவர் . இவர்களுக்கு நன்றிநவிலச் சொற்கள் போதா . தலையலால் வேறு கைம்மாறில்லை.
பழனியம்பதியில் வாழும் பரம்பொருளின் திருவடிகளில் இந்த எளியவன் நெஞ்சம் எஞ்ஞான்றும் தோய்ந்திருக்க – இறையருள் துணைநிற்க வேண்டும் .
அடியேன் வெறும் கருவி , ஆவினன் குடிப் பெருமான்தான் கர்த்தா , எல்லாப் புகழும் எம்பிரானுக்கே !
வாலி –
சென்னை
14.03.2004