Skip to content

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

Category:

பேசுபவர் : திரு சி.இராஜேந்திரன்

புத்தகம் : “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்”

ஆசிரியர் : திரு வி.கலியாணசுந்தரனார்

(குறிப்பு: இந்நிகழ்வு Google Meet வழியே நேரலையில் (லிங்க்:https://meet.google.com/orc-fmjb-xmp) நிகழும். நிகழ்ச்சி நடைபெறும் நாளன்றும் லிங்க் மீண்டும் WhatsApp வழி வழங்கப்படும்)

பேச்சாளர் பற்றி:
இந்த வார பேச்சாளர் திரு சி. இராஜேந்திரன் I.R.S., அவர்களின் தந்தைவழிப் பாட்டனார் அமரர் மு. வையாபுரி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய வருவாய்ப் பணியில் (IRS- சுங்கம், மத்திய கலால் மற்றும் சேவை வரி) 1985-ஆம் ஆண்டு சேர்ந்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கப்பூரில் இந்திய தூதரகத்திலும் பணியாற்றிய அனுபவம் உடையவர். மத்திய அரசுப் பணியில் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், இவருக்கு 2003-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது விருது வழங்கப்பட்டது. “திருக்குறள் உவமை நயம்” என்ற 238 திருக்குறள் உவமைகளுக்கு விளக்கம் அடங்கிய நூலை 2007-இல் எழுதி வெளியிட்டார். அதுமுதல், பல்வேறு இடங்களுக்கும் சென்று திருக்குறள் சார்ந்த பயிற்சி பட்டறைகளை பல்வேறு தளங்களில் நடத்தியிருக்கிறார். “பாமரருக்கும் பரிமேலழகர்” என்ற 1890 பக்கங்கள் கொண்ட இவரதுநூல் பத்தாண்டு கால உழைப்பில் விளைந்தது. இவரது திருக்குறள் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கிப் பாராட்டியுள்ளன. இதற்கு முன்னர் “எல்லாம் செயல் கூடும்: காந்திய ஆளுமைகளின் கதைகள்” என்ற பாவண்ணன் அவர்களின் நூலை அறிமுகம் செய்து புதன் வாசகர் வட்டத்தில் பேசியிருக்கிறார்.

நூல் பற்றி:
“காந்தியடிகள் வாழ்விலுள்ள நுட்பத்தையும், அவர் அறிவுறுத்தும் அறத்தையும் தமிழுலகும் உணர்ந்து உய்ய வேண்டுமெனும் அவாவே இந்நூலை விரித்தெழுத என்னைத் தூண்டிற்று” என்றும் “காந்தியடிகளின் வாழ்க்கையைப் பற்றி கூறுவதன்று இந்நூல், அவரது வரலாற்றிலுள்ள நுட்பங்கள் மனித வாழ்க்கையோடியைந்து நிற்கும் முறையைக் குறிப்பது – அதாவது காந்தியத்தை அறிவுறுத்துவது” என்றும் இந்நூல் குறித்து நூலாசிரியர் திரு.வி.க. அவர்கள் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

ஆசிரியர் பற்றி:
திரு.வி.க. என்ற திரு வி.கலியாணசுந்தரம் (1883-1953) அவர்கள் கவிஞர், விடுதலை போராட்ட வீரர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பல்சமய அறிஞர் என பன்முகத் திறன் கொண்டவர். பல் மொழி அறிஞரான இவர் சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் ‘இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். சென்னையில் காந்தியடிகள் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். தேசபக்தன், திராவிடன் பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார். சொந்தமாக நவசக்தி வார இதழைத் தொடங்கி திறம்பட நடத்தினார். சென்னையில் 1918-ல் முதன்முதலாக தொழிற்சங்கம் உருவானதில் இவரது பங்கு மகத்தானது. ஏராள நூல்களை எழுதியுள்ள இவரை புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை, தமிழ்த் தென்றல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் பலவாறாக புகழப்பட்டார். ‘தமிழ்நாட்டு காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கியவர்’ என்று இவரைப் பாராட்டியுள்ளார் கல்கி.

தொடர்புக்கு :
காந்தி கல்வி நிலையம்,
தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,
58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்,
சென்னை – 600017
தொடர்புக்கு: 9790740886 (ம) 9952952686