Skip to content

காந்தியின் கட்டளைக்கல்

Category:
காந்தியின் கட்டளைக்கல்  (2021 )
அ. இராமசாமி
(23/06/1923- 06/12/1982)
இந்நூலாசிரியர் மதுரை அருகே புதுத் தாமரைப்பட்டியல் என்ற கிராமத்தில் பிறந்தவர். காந்தியம் – வள்ளுவம் – அறத்தில் தோய்ந்தவர். தமிழ்நாட்டில் காந்தி வரலாற்று என்ற நூலை அரும்பாடுபட்டு எழுதியவர்
இவர், காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையை உற்று நோக்கி 26 சிறு சிறு நிகழ்வுகளை, வள்ளுவம் என்னும் “கட்டளைக் கல்”லில் உரசிப் பார்க்கிறார்.
காந்தி மகாத்மாவாக உருவானது தென்னாப்பிரிக்காவில்தான். அங்குதான்  அவர் சம்பந்தப்பட்ட மனோ உணர்வுகள் நமக்கு நெருக்கமாகத் தெரிகின்றன. இந்தியாவுக்கு வந்த பின்பு பெரிய நாட்டின் பெரிய தலைவராகி விட்டார். ஆகவே, இத்தகைய மன உணர்வுகளை எல்லாம் அவ்வளவு நெருக்கமாக பார்க்க இயலாத அளவிற்கு அவர் சற்றுத் தொலைவில் போய்விட்டார். அதனால் தான் காந்தி வாழ்க்கையில் தென்ஆப்பிரிக்கா சம்பந்தமான அத்தியாயங்கள் ஒரு தனி முக்கியத்துவம் வகிக்கின்றன.
அங்கேதான், காந்திக்கு பாலசுந்தரம் என்ற தமிழன் அறிமுகமானார், அவருக்குத் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களுடனான , தமிழர்களுடனான உறவு தொடங்கியது; காந்திக்கு  வள்ளுவம் அறிமுகமானது, அதனால் அவருக்குத் தமிழ் மீது ஆர்வம் பிறந்தது.
தங்கத்தின் தரத்தை உரசிப்பார்க்க உதவும் கல்தான் கட்டளைக்கல்.
காந்தியின் வாழ்வில், தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் அவர் கைக்கொண்ட “கட்டளைக்கல்” வள்ளுவர் கூறும் அறமே என்று நிறுவுகிறார் நூலாசிரியர் அ. இராமசாமி.
காந்தியின் வாழ்வு, குறள் கண்ட வாழ்வு என்று சொல்கிறது “காந்தியின் கட்டளைக்கல்”