Skip to content

கண்மருத்துவர் ப.இரமேஷ், கரூர்

கண்மருத்துவர் ப.இரமேஷ், கரூர்

கரூர் கண் மருத்துவர் இரமேஷை சந்திக்க நண்பர் குறளகனுடன் சென்றேன். நோயாளிகளைப் பார்க்கும் நேரம். ஐந்து மணித்துளிகள் மட்டுமே பேச முடியும். விரைவாகப் பேசி முடியுங்கள் என்று எச்சரிக்கை செய்தார் குறளகன். “மூன்றாவது மேற்கு மண்டல ஒருங்கிணைப்பு மாநாடு” கரூரில் நடத்த உள்ளோமென்று திருக்குறள் திருவள்ளுவர் என்று தொடங்கிய உடனே அவர் ஒரு நூலை எடுத்துக் கொடுத்தார். ‘பளபள’ என மின்னும் அட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட 100 குறள்கள் அதற்கான பொருள், ஆங்கில விளக்கப் படங்கள் என கையிலெடுக்கும் போதே குறள் மணம் வீசி என்னை அவரோடு ஐக்கியப் படுத்திவிட்டது.

நான் என்ன பேசினேன் மாநாட்டைப் பற்றி என்ன விளக்கினேன் என்று தெரியவில்லை, என்ன வேதியல் மாற்றம் நடந்ததென்று தெரியவில்லை. அவர் தான் உதவியாளரை அழைத்து ரூ.10,000/- (பத்தாயிரம்) எடுத்து வரச் சொல்லி மாநாட்டை சிறப்புற நடத்துங்கள். மாநாட்டில் விரிவாகப்  பேசுவோம் என்று விடையளித்தார். ஐந்து நிமிடம் முடிந்துவிட்டது. நண்பர் குறளகனுக்கு வியப்போ வியப்பு. திருக்குறள் இப்படியும் இவரை வசீகரிக்குமா என்று கேட்டார். அத்தகைய பெருமை பெற்றவர் மருத்துவர். இரமேஷ்.

தானே ஒரு திருக்குறள் தொண்டு மன்றமும் வைத்து இலட்சக்கணக்கில் செலவு செய்து மாணவர்களுக்குப் போட்டி நடத்தி பரிசளிப்பு செய்து வருகிறார். திருக்குறள் கருத்துக்கள் மக்கள் மயமாக வேண்டும் என்ற என்னுடைய திட்டத்தை முழுதாக உள்வாங்கியவர்களில் ஒருவர். ஒரு கூட்டத்தில் நான், அனைவரும் தங்களின் வாகனங்களில் ஏதேனும் ஒரு திருக்குறளை அல்லது திருக்குறள் கருத்துக்களை ஒட்டியாக ஒட்டிவைக்க வேண்டும், அது எளிதாக மக்களைச் சென்றடையும் என்று பேசியதை அப்படியே ஏற்று அதைத் தான் மட்டுமல்லாது பல நூறு பேரிடம் பரப்புரையாகவும் செய்து வருகிறார். நான் நூறு கூட்டங்களில் பேசியதை இப்படி ஒருவர் கூட உடனடியாக செயல்படுத்தியதில்லை.

மேலும், மருத்துவர். இரமேஷ் மருத்துவராக மட்டுமல்லாமல் “வாழ்க வளமுடன்” அமைப்பின் நல்ல சிந்தனைகளை முறையாகப் பயின்று மற்றவர்களுக்கும் பயில்விப்பதற்காகத் தன் மருத்துவமனையிலேயே ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்துள்ளார். கல்வி தேர்வுகளில் சிறந்தவராகத் தான் மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் அதன் வழியில் நடத்துவதென்பது எல்லோரும் செய்யாத ஒன்று.

மருத்துவர். இரமேஷ் திருக்குறள் பரப்புரையாளர் மட்டுமல்ல திருக்குறள் தொண்டர் என்றே அடையாளப்படுத்தப்படவேண்டியவர்.

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்