Skip to content

திரு. கூலவாணிகன் இராமசாமி, கோவை

திரு. கூலவாணிகன் இராமசாமி, கோவை

பலரும் செய்யும் அரிசிவணிகம் தான் இராமசாமியும் செய்கிறார். ஆனால், தன்னை கூலவாணிகன் என்று சொல்லிக்கொள்வதிலேயே பெருமை அடைகிறார். தமிழின் மீதும் தமிழிலக்கியங்களின் மீதும் கொண்ட காதால் தான் இவரை இப்படி அழைத்துக் கொள்ள தூண்டியது என்று நினைக்கின்றேன். கோவை பந்தயச்  சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் அன்பர்களைக் கொண்டே முத்தமிழ் மன்றம் என்ற ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூடி தமிழ்க்கவிதைகள், திருக்குறள் உரைகள் என பல நிகழ்வுகளை நடத்தி சிறப்பான எழுத்தும் பேச்சும் வெளிப்படுத்துபவர்களுக்கு அங்கேயும் பாராட்டு செய்கிறார். பெரும்பாலும் இப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் வயதின் காரணமான தளர்ச்சி அடையாமல் இருக்க ஊக்கமருந்தாக இந்நிகழ்வுகள் அமைவதாகக் கருதுகிறார். தமிழ்நாட்டிலுள்ள மற்ற தமிழ் அமைப்புகளையும் ,குறள்

அமைப்புகளையும் இணைத்துப் பணியாற்றவும் முன் வந்துள்ள இராமசாமியும் ஞானமன்றமும் இணைந்து சில பணிகளை ஆற்ற முன் வந்துள்ளது. இவர் கோவையில் திருவள்ளுவருக்கு ஒரு சிலை அமைக்க பத்து ஆண்டுகளாக இடம் தேடி வருகிறார் என்று அறிந்த போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. இத்தனை பேர் இருந்தும் 2 சென்ட் இடத்தை சொந்தமாக வாங்கிக் கூட சிலை வைத்திருக்கலாமே என்று மனதில் தோன்றியது . திண்ணிய எண்ணம்  வந்துவிட்டால் இடமும் கிடைக்கும் பொருளும் கிடைக்கும் என்பதை உணர்த்தியுள்ளேன்.

விரைவில் இந்த திருக்குறள் தொண்டர் அதை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

அவர் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்