Skip to content

திரு. ந. கலியபெருமாள்,மயிலாடுதுறை

திரு. ந. கலியபெருமாள், மயிலாடுதுறை

உடையார்பாளையம் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் தனி உதவியாளர் இவர். நான் தலைமையாசிரியராக இவரைச் சந்திக்கின்றேன். பொதுவாக தமிழ் நாட்டில் கீழ்நிலை அலுவலர்களை (தலைமையாசிரியரைக் கூட) மிரட்டிப் பார்ப்பதும், நிற்க வைத்து பேசுவதும் வழக்கமாகவே உள்ளது. இயல்பாகவே, எனக்கு இது பிடிக்காததால் ஒரு நாற்காலியை நானே எடுத்து வந்து போட்டுக் கொண்டுதான் பேசுவேன். தற்போது எல்லோராலும் அன்பாக ந. க. என்று அழைக்கப்படும் ந. கலியபெருமாள் முரண்பாடாகவே என்னை கவனித்தார், பேசினார்.

ஆனால் நான் அவரிடம் பேச வந்தது பாவாணர் பற்றிய பேச்சுப்போட்டி கட்டுரைகளை பள்ளி மாணவர்களை வைத்து நடத்தச் சொல்லும் சுற்றறிக்கையை பாராட்டவும், எங்கள் சின்னவளையம் பள்ளியில் நடத்திய போட்டிகளின் அறிக்கையை கொடுப்பதற்காகவே ஆகும். அப்போதுதான் இக்கல்வி மாவட்டத்திலேயே இவர் ஒரு தனி விதமாக இருக்கிறாரே என்று வியந்தார். அப்படிப்பட்ட ந. க. மாவட்டக்கல்வி அலுவலராகப் பணியேற்றபின் தன் நண்பர்களின் கோரிக்கையை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். இடையிலேயே பல தமிழ் எழுச்சிக் கூட்டங்களில் இருவரும் சந்தித்திருந்ததால் இணக்கமாகப் பழகி அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அனுப்பி வைத்தேன்.

அதற்குப் பிறகு அவருடைய குடும்ப நண்பராகவே மாறி இரண்டு வீட்டுத் திருமணங்களுக்கும் இருவரும் கலந்துக் கொள்ளக் கூடியவர்களாகவும், தமிழ் அமைப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்ளக் கூடியவர்களாகவும் மாறினோம். அப்போது தான் மயிலாடுதுறையில் திராவிட இயக்கத் தொண்டர் இரகுபதியின் திருக்குறள் தொண்டைப் பற்றி அறிய முடிந்தது.

தினந்தோறும் மயிலாடுதுறை கிணற்றங்கரை நிறுத்தத்தில் (திருவாரூர் சாலை) ஒலிபெருக்கி வாயிலாக காலை 7.00 மணிக்கு இரகுபதி திருக்குறள் பரப்புரை செய்வதை அறிந்து பாராட்டினேன். ந. க. அவர்களின் சந்திப்பு இதன்மூலம் நெருக்கமானதால் அவரையும், நீலகண்டனையும், மாணிக்கத்தையும் ஒரு சேர சந்தித்து திருக்குறள் பேரவை அமைக்க வழிகாட்டுதல் செய்தேன். அதன் செயலராக இருந்தது ந. க. மயிலாடுதுறை நகரையே கலக்கும் அளவிற்கு செய்துவிட்டார். தொடர்ச்சியான அவரது உழைப்பால் திருக்குறள் பேரவை உச்சத்தைத் தொட்டுள்ளது. 100 பேருக்கு மேல் ஒவ்வொரு மாதமும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வுகள்  நடத்தி, சிறந்த நிகழ்வுகள் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தார்.

ஆனால் கடந்த நன்கு மாதங்களுக்கு முன்( 2018) உடல் நலக்குறைவில் மறைந்துவிட்டார். ஆயினும் அவர் செயலின் வீச்சால் இப்போதும் அப்பேரவை சிறப்பாக நடைபெறுகிறது.

வாழ்க ந. க. வின் புகழ்.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்