Skip to content

திரு. உடையார் கோவில் குணா,தஞ்சை

திரு. உடையார் கோவில் குணா, தஞ்சை

‘திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டுமென்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக அப்போதைய முதலமைச்சர் அம்மா அவர்களுக்குப் பாராட்டும் விழாவை சென்னை எழும்பூர் அருங்காட்சியக்கலை அரங்கில் ஓர் அரசு விழாவாகவே நடத்திய திறமை உடையார் கோவில் குணாவிற்கு இருந்தது. அந்நிகழ்வில் எனக்கும் கல்விச் செயலர் இராசாராம் கையால் அழகான விருது ஒன்றும் வழங்கினார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகளோடும் தொடர்பு கொண்டு தமிழுக்கு ஏதேனும் தொண்டு செய்ய அணியமாய் இருப்பவர். ஆனால் அயல் நாடுகளுக்கு நண்பர்களை அழைத்துச் சென்று நிகழ்ச்சி நடத்துவதை சில காலம் செய்யத்தலைப்பட்டதால் பல சிக்கல்களுக்கு ஆளானார். நான் அவரிடம் கூறினேன் நம் தமிழ்நாட்டில் இன்னும் ஆழமாக திருக்குறள் பணியை செய்ய வேண்டியுள்ளது. அதைக் கையில் எடுங்கள் என்று உரிமையோடு கூறியக்காரணம் நான் மாவட்டக்கல்வி அலுவலராக இருந்தபோது தாய்த்தமிழ்ப் பள்ளி ஒன்றுக்கான அங்கீகாரத்திற்குத் தான் முதலில் வந்தார். ஆனால், அதில் பல நிர்வாகச் சிக்கல்கள் இருந்ததால் என்னால் அங்கீகாரம் வழங்க முடியவில்லை. ஆனாலும், நான் செய்து வந்த திருக்குறள் பணிகளைப் பாராட்டும் வகையில் பல நிகழ்சிகளுக்கும் அழைத்துப் பேசச் செய்வார்.

இறுதியாக திருக்குறள் சிலைப் பயணம் ஒன்றை குமரியில் தொடங்கி சென்னை வரை 10 நாட்கள் நடத்திய பொது நான் மட்டும் ஆறு ஊர்களில் வரவேற்பளித்தேன். குடந்தை, தா.பழூர், மதனத்தூர், செயங்கொண்டசோழ புரம், ஆண்டிமடம், நெய்வேலி ஆகிய ஊர்களில் வரவேற்பு நல்க ஏற்பாடு செய்தேன். காரணம் திருவள்ளுவர் மக்களிடத்தில் முழுமையாகக் கொண்டு செல்லப்படவேண்டும் என்ற கருத்தை செயலாக்கிக் காட்டியவர் குணா.

அதுமட்டுமல்ல அண்மையில் இந்திய ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாநிலங்கள் அதில் உறுப்பினர் தருண் விஜய் அவர்களின் திருக்குறள் பணியைப் பாராட்டி அவருக்கு நினைவுப் பரிசு வழங்க குணா என்னுடைய வீட்டில் இருந்த திருவள்ளுவர் சிலையையும், கட்டோட்டையும் அவரிடம் அளித்து எனக்கும் சிறப்பு செய்தார்.

இத்தகைய நண்பர் குணாவை இத்தொகுப்பில் சேர்க்காவிட்டால் அது குறையாகிவிடும்! வாழ்க குணாவின் நற்தொண்டு! அவர் அமைத்துள்ள தமிழ்த் தாய் கோவில் எல்லாத் தடைகளையும் தண்டி உலகு சிறக்க வாழ்த்துகிறேன்.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்