Skip to content

“Friends, with all your permission, I would love to kiss the feet of the Master” -Gabriel Rosenstock

“Friends, with all your permission, I would love to kiss the feet of the Master”
-Gabriel Rosenstock

நண்பர்களே, உங்கள் அனுமதியுடன் பேராசான் திருவள்ளுவரின் திருவடிகளில் முத்தமிட விரும்புகிறேன்
– அயர்லாந்து கவிஞர் கேப்ரியல் ரோசன்ஸ்டாக்.

வள்ளுவன் தன்னை உலகினிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு! – என்று மகாகவி பாரதியும்
வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே! – என்று புரட்சிக்கவி பாரதிதாசனும் முழங்கிய வரிகளுக்கு இணங்க
தமிழ் மறை உலகப்பொதுமறை திருக்குறளை அயர்லாந்தின் ஐரிஷ் (கேலிக் )மொழியில் மொழியாக்கம் செய்து வான்புகழ் பெற்றுள்ளார் அயர்லாந்து கவிஞர் கேப்ரியல் ரோசன்ஸ்டாக்.

அயர்லாந்து தேசத்தின்இலக்கிய கருவூலம்,
வாழும் இலக்கிய பேராளுமை என்று போற்றப்படுகின்ற கவிஞர் கேப்ரியல் ரோசன்ஸ்டாக்

அயர்லாந்தின் லிம்ரிக் நகரில் 1949 ஆண்டு பிறந்தார். மிகச்சிறந்த ஐரிஷ் மொழிக் கவிஞர் ,எழுத்தாளர் ,கட்டுரையாளர், பத்திரிகையாளர் ,மொழிபெயர்ப்பாளர் ,180 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். பத்திரிக்கை ,தொலைக்காட்சி ,பதிப்பகங்கள் எனப் பணியாற்றிய பட்டறிவு மிக்கவர் .

அயர்லாந்து கவிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர், பல்வேறு சர்வதேச ஹைக்கூ கவிதை மன்றங்களில் உறுப்பினர். மேலும் ஐரிஷ் மொழிபெயர்ப்பாளர்கள் அமைப்பின் கெளரவ வாழ்நாள் உறுப்பினராக உள்ளார்.

திருக்குறள் ஐரிஷ்(கேலிக் )நூல் வெளியீட்டு நிகழ்வில் கவிஞர் கேப்ரியல் ரோசன்ஸ்டாக் அவர்கள் உரையின் சிலத் துளிகள் :

“திருக்குறள் ஓர் வழிகாட்டும் கையேடு..
நேர்மையான வாழ்க்கை நெறிகளின் தொகுப்பாக நிற்கிறது.
இது அரசியல், இல்லறம் மற்றும் எண்ணற்ற பிரிவுகளை உள்ளடக்கியது. உலக இலக்கியத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ள சிறந்த படைப்பு திருக்குறள்.
இந்த நூலில் உள்ள பிரிவுகளில், காதல் என்ற கருப்பொருளை ஆராயும் காமத்துப்பால் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதன் இயல்பான பாடல் வரிகள் என்னைக் கவர்கிறது. திருவள்ளுவர் அதை கற்பனையில் இருந்து உருவாக்கவில்லை, மாறாக அன்பின் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து பல அற்புதமான உணர்வுகளை கொண்டு வருவதைப் போல உணர்கிறேன்.
இத்தகைய அறிய நூலை இத்தனை காலம் எவ்வாறு தவறவிட்டேன் என எனக்கு தெரியவில்லை
நான் இந்த நூலை ஐரிஷ் மொழியில் மொழியாக்கம் செய்ய சற்று காலம் பிடித்தது.இந்த நூலை எனக்கு அறிமுகப்படுத்தி மொழியாக்கம் செய்ய உதவிய பேராசிரியர் ஓவன் மெகார்த்தி அவர்களுக்கும் ,அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்திற்கும் மனமார்ந்த நன்றி”

அறிஞர்கள் கால்டுவெல் மற்றும் பெர்னாட்ஷா வாழ்ந்த மண்ணில் உயர்தனிச்செம்மொழியான தமிழுக்கும் , பேராசான் திருவள்ளுவர் தந்த திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அயர்லாந்தின் தாய்மொழியில் திருக்குறளை மொழியாக்கம் செய்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார் கவிஞர் கேப்ரியல் ரோசன்ஸ்டாக். வாழ்க நீவிர் புகழ்..

பேரன்பும் நன்றியுடனும்
அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம்

Facebook:
https://www.facebook.com/100063567014372/posts/862103979251828/?mibextid=I6gGtw