Skip to content

திரு. சேலம் பாலன்,ஈரோடு

திரு. சேலம். பாலன், ஈரோடு.

சேலம் அம்மாப்பேட்டையில் நெசவாளர் குடும்பத்தில் நாட்டு விடுதலைப் போராட்ட வீரரின் மகனாகப் பிறந்த பாலன். தற்போது ஈரோட்டில் வாழ்கிறார். வெறுமனே வசிக்கிறார் என்பதற்கும் பதிலாக வாழ்கிறார் என்று சொல்வதற்கு, “மனிதன் எந்த நிலையிலும் பிறருக்கு உதவுபவனாகவும், இணக்கமானாகவும் தானும் வாழ்ந்து சமூக அக்கறையோடு இனம், மொழி இவற்றுக்காக உழைக்கின்றவனாக இருக்கவேண்டும்”. அப்படி வாழ்கின்ற பாலனை வசிக்கிறார் என்பதை விட தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் வாழ்கிறார் என்று சொல்கிறேன்.

பெரிய கல்லூரி படிப்பு எதுவும் இல்லை. பெரிய தொழில் வளமோ வருமானமோ இல்லை. ஆனாலும், எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை என்ற அமைப்பையும் ‘துளி’ என்ற சிற்றிதழையும் நடத்தி வருகின்றார். திருக்குறள் முழுமைக்கும் விருத்தப்பா வடிவில் உரை எழுதியுள்ளார். அது தொடர்பாக கலைஞர் அவர்கள் தொலைபேசி மூலம் அழைத்துப் பாராட்டியதை மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறார்.   ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் தமிழ்த் தொண்டும், திருக்குறள் பரப்புரையும் செய்யும். தொண்டர்களை அழைத்து பெருமைப்படுத்தி சொற்பொழிவுகள் நடத்தி ஒருங்கிணைத்து வருகிறார்.

தமிழ்நாட்டின் எந்த மூலைமுடுக்கில் தமிழ் விழாவும் திருக்குறள் விழாவும் நடந்தாலும் சேலம் பாலனைப் பார்க்கலாம். திருக்குறளுக்கு வெண்பாவிலேயே விளக்கமளித்து ஒரு செழுமையான நூலை வெளியிட்டுள்ளார். பட்டம் பல பெற்ற எந்த புலவரும் குறை சொல்ல முடியாதவாறு நூலையியற்றியுள்ளார். அதேபோல, மறைந்த தமிழறிஞர்கள் 100 பேருக்கு மேல் நிழற்படம் வைத்து ஒவ்வோர் ஆண்டும் கண்காட்சி நடத்துகிறார்.

நான் நடத்திய ஐந்து மாநாடுகளிலும் நான் சொன்ன ஒரு தலையாய பணியைச் செய்து வருகிறார். அதாவது திருவள்ளுவர் ஞானமன்றத்தில் சீருடையாக நாங்கள் அறிமுகப்படுத்தி வரும் சந்தன நிறச் சீருடையை அவர்தான் அணியமாக்கி கொண்டு வருவார். இது நமக்கு சாதாரண வணிகமாகக் கூட தெரியும்.

ஆனால், அவர் அதை தலைமேல் சுமந்து வருவதை கண்ட நான் திருக்குறளையே தலையில் சுமப்பதாகவே கருதினேன். ஈரோட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் சேலம் பாலன் பெயர் சொன்னால் தெரியும்.

திருக்குறள் தெளிவும், உழைப்பும் உள்ள சேலம் பாலனை திருவள்ளுவர் திருத்தொண்டர் எனப் பாராட்டுவதில் உள்ளபடியே மனம் நிறைவடைகிறேன்.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்