Skip to content

திரு. த. ஆதிலிங்கம்,சென்னை

திரு. த. ஆதிலிங்கம், சென்னை.

திருக்குறளுக்கென்று முழு நேரமும் ஒதுக்கி செயல்படுபவர்கள் வரிசையில் சென்னை  பேராசிரியர் கு மோகனராசுவிற்கு அடுத்து இவர்தான் வருவார். குமரி மாவட்டத்தில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் கிளைகள் பரப்பி தான் தொடங்கிய குறள் அரசுக் கழகத்தை விரிவுப்படுத்தியவர். குறள் அரசுக்கழக முதல் அமைப்புக் கூட்டம் மதுரையில் நடந்தபோது நானும் என் துணைவியார் உட்பட 10 பேர் கலந்துக்கொண்டோம். மொத்தம் 30 பேர்தான் கலந்துக்கொண்டிருந்தாலும் ஆதிலிங்கத்தின் உறுதியால் அது பல ஆண்டுகள் தமிழகத்தில் கால் பதித்து ஓர் அலையை உண்டாக்கியது.

ஆனாலும், அவர் முதலில் தொடங்கியிருந்த குமரி மாவட்ட திருக்குறள் மிஷன் என்ற சமுதாய வளர்ச்சி மன்றத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகள் ஊடகத்தில் வெளிப்படுத்தப்பட்டு குறள் அரசுக் கழகத்திற்கே பின்னடைவு ஏற்பட்டது. அவரோடு பல மாநாடுகளையும், கூட்டங்களையும், நடைப்பயணங்களையும் நானும் நடத்தியிருப்பவன் என்பதால் அவரின் உழைப்பையும் உறுதியையும் அறிந்திருக்கிறேன். இவரை விட இவர் துணைவியார் தீவிரமாக திருக்குறளை நேசிப்பவர். காவல் துறையில் பணியாற்றிக்கொண்டே கணவரின் திருக்குறள் பணிக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதனால்தான், தற்போதும் சென்னையில் பல நூறு திருக்குறள் பயிற்சி மையங்களை அமைத்து ஆசிரியர்களை நியமித்து பயிற்சி அளித்துவருகிறார்.

அவரும், நானும் ஆசிரியர் குழுவில் இருந்தபோது ‘குறள் அரசு’ இதழில் வெளியிட்டிருந்த முழக்கம் என்னை பெரிதும் கவர்ந்தது. அதாவது (2010 இல்) இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் திருக்குறள்தான் ஆட்சி செலுத்தும். 10 ஆண்டுகளில் இந்திய முழுவதும் பரவிவிடும். 15 ஆண்டுகளில் உலகம் முழுவதும் வரவேற்கப்படும் என்பதுவே அத்தொடர். இப்படி எண்ணவும், எழுதவும் யாருக்குத் துணிச்சல் வரும், தற்போது உலகத்  திருக்குறள் கூட்டமைப்பின் செயலராக பணியாற்றி வருகிறார் .

திருக்குறள் திருத்தொண்டர் தொகையில் இவரையும் இணைத்துக் கொள்வதில் எனக்கு மனநிறைவு உண்டு.

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்