Skip to content

திரு. ஆறுமுகம்,புவனகிரி

திரு. ஆறுமுகம், புவனகிரி

வணிகர்கள் எல்லாம் சேர்ந்து வள்ளுவம் வளர்த்தால் எப்படி இருக்கும்!

மக்கள் இயக்கமாக வள்ளுவம் மாறவேண்டும் என்று நாம் கூறுவது இதைத்தான்.

கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த கைலி வணிகர் ஆறுமுகம் தன்னோடு இளமையில் படித்த இருபது கடைக்காரர்களை இணைத்துக்கொண்டு திருக்குறள் இயக்கம் நடத்துகிறார் என்று அறிந்தபோது என் உள்ளம் குளிர்ந்தது. அதுவும் ஓராண்டுக்கான திங்கள் கூட்டங்களை முன் கூட்டியே திட்டமிட்டு பேச்சாளர்கள் தலைப்பு எல்லாவற்றை குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சடித்து நகரம் முழுவதும் விநியோகித்து விடுகிறார். நகரத்தின் மையப்பகுதியுள்ள பெண்கள் மேனிலைப்பள்ளி வளாகத்தில் அரசு அனுமதியோடு ஒவ்வொரு தமிழ்த் திங்கள் இறுதி ஞாயிற்றுக் கிழமையும் கூடி திருக்குறள் பயிற்சி அளிக்கின்றார்.

ஆண்டுக்கொருமுறை திருவள்ளுவர் தேரோட்டம் நடத்தி இரண்டு நாள் விழாவாகப் பெரிய அளவில் நடத்துகிறார். இவை அனைத்தையும் மற்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து தலைவராக இருந்து செயல்படுபவர் தான் ஆறுமுகம்.

அவரோடு எனக்கு ஏற்பட்ட ஐந்தாண்டு தொடர்பில் நான் நடத்திய ஐந்து மாநாடுகளில் தன் குழுவினரோடு கலந்துக்கொண்டார். திருக்குறள் ஒட்டிகள் வாயிலாகப் பரப்புரை செய்யலாம் என்று கூறியதை ஏற்று இரண்டாயிரம் ஒட்டிகள் பெரிய அளவில் குறளின்  பொருளோடு அச்சடித்து நகரம் முழுவதும் ஒட்டினார். தன்னுடைய அனைத்து விழாக்களையும் ஞான மன்றத்தில் உருவாக்கி வைத்துள்ள திருவள்ளுவர் வெண்கலச்சிலையை கொண்டுவரச் செய்து நகர்வலம் வரச் செய்வார். புவனகிரியில் இராகவேந்திர சுவாமிகளுக்கு ஆலயம் இருப்பது போல திருவள்ளுவருக்கும் கோயில் எழுப்பச் சொல்லியுள்ளேன். அதனை உறுதியாக செய்து முடிப்பேன் என்று கூறியுள்ளார். என்னுடைய நூல்கள் வெளியீட்டிற்கு பொருளுதவி  செய்துள்ளார்.

அறம் வளர்க்கும்  வாணிகர் ஆறுமுகம் வாழ்க !  வளர்க !!

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்