Skip to content

அறம் Vs தருமம்

குறள் ஞானி பேராசிரியர் கு மோகனராசு ஐயா பார்வை

அருளுடையீர் வணக்கம்

அறமும் தருமமும்

இயற்கை என்பது பேரண்டமாக விளங்குவது; அதற்கெனத் தனித்த இயக்க நெறிகள் உள்ளன; அந்த நெறிகளை இயற்கையின் சட்டங்கள் ( Law of Nature ) என்று வழங்குவர். இயற்கையின் இயக்க நெறிகளில் நல்லனவும் உண்டு, அல்லனவும் உண்டு.

இயற்கையின் அணுவுக்குள் அணுவாக அமைந்தவன்தான் மனிதன். அவன் இயற்கையின் இயக்கத்திற்குத் தகவே தன்னுடைய இயக்கத்தையும் அமைத்துக்கொள்ள வேண்டி உள்ளது. மீறினால் அழிவே மிஞ்சும்.

அதனை நன்கு உணர்ந்த நிறைமொழி மாந்தர்கள் இயற்கையின் அந்த இயக்க நெறிகளுள் அல்லன விடுத்து நல்லன தேர்ந்து, மனித வாழ்க்கைக்கு ஏற்றனவாக வடிவமைத்து, உலக நலம் கருதி வழங்கும் வாழ்க்கை நெறிகளுக்குப் பெயர் அறம்.

இது, இடம், சூழல், இயற்கையை அறிந்தார் அறிவு, வெளிப்படுத்தும் நோக்கம் மற்றும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப வேறுபடுதல் உண்டு.

இயற்கையை நுண்ணிதின் ஆராய்ந்து அறிந்து, உலகம், உலக உயிர்கள், உலக மக்கள் என்னும் உணர்வோடு அந்த அறக்கருத்துகளை வடிவமைக்கும்போது, அவை பெரிதும் ஒன்றி வர வாய்ப்புகள் உள்ளன. இயற்கையோடு ஒன்றிய அறக்கருத்துகளாக அமைந்தால் அவை உலகப் பொது அறங்களாக அமைய வாய்ப்புகள் உள்ளன. அப்படி அமையும் அறக்கருத்துகள் சாதி, மதம், இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்தனவாக அமையும். பெரிதும் அத்தகைய அறக்கருத்துகளை உள்ளடக்கியதாக அமைந்த அறநூல்தான் திருக்குறள்.

அறநெறிச் சான்றோர்கள் அறக்கருத்துகளை வடிவமைக்கும்போது, சாதி மதம் என்னும் வேறுபாடுகளை உள்ளடக்கி, மேலாதிக்க உணர்வோடு அவற்றை வெளிப்படுத்தினால், அவை பெரிதும் இயற்கைக்கு மாறான வாழ்க்கை நெறிகளாக அமைந்து விடும். மக்களை வேறுபடுத்தி, பிளவுப்படுத்தி, ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை நெறி என வரையறுத்து, அவற்றுள் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வாழ்க்கை நெறிகள் வழங்கப்படுமானால், அவை அறம் என்னும் தகுதியை இழந்து விடுகின்றன, அவ்வகையில் உருவாக்கம் பெற்றவைதான் வருணாசிரம தருமங்கள். இவை பொது அறத்திலிருந்து வேறுபட்டவை.

இவ்வகையில் அறம் வேறு தருமம் வேறு.