Skip to content

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

டாக்டர் மா. இராசமாணிக்கனார் (12.03.1907 – 26.05.1967)

ஆராய்ச்சி அறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1959 முதல் 1967 வரையில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பத்துப்பாட்டு ஆராய்ச்சி, பல்லவர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, சங்க காலம், தமிழர் திருமணத்தில் தாலி, பெரியபுராண ஆராய்ச்சி, சோழர் வரலாறு என நூற்றுப் பத்துக்கும் மேற்பட்ட நூல்களையும் நூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவருடைய நூல்கள் பல்வேறு பதிப்பகங்களால் பல்வேறு பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இவரது உரைநடை எளிமையானது, ஆராய்ச்சிக்கேற்றது. இதில் வெற்றுரையோ, சொல்லடுக்கோ, பொருளற்ற மொழியோ கிடையாது என்று போற்றுகிறார் திரு.வி..

இவரது நூல்கள் இவரது நூற்றாண்டு விழாவில் மா.ரா.களஞ்சியம் (2008) என இருபெருந் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவர் எழுதிய ஆற்றங்கரை நாகரிகம் (காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை, பொருநை, குற்றால அருவி ஆற்றங்கரை பண்பாடு) தொடர்பான நூல்களும் குறிப்பிடத்தக்கன.

பேராசிரியர் மா. இராசமாணிக்கனார் பல்துறை அறிஞராகத் திகழ்கிறார். தமிழ்மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, சமய வரலாறு, காப்பிய வரலாறு, பண்பாட்டு வரலாறு, கல்வெட்டு ஆய்வு எனப் பன்முகம் கொண்ட அறிஞராகத் திகழ்கிறார்.

தமிழினப்பற்றும் தமிழன் உயர்ந்திட வேண்டும் என்னும் வேட்கையும் உடையவர். தமிழ்நெறியும் சிவநெறியும் இவருக்கு இருகண்கள். கல்வெட்டு ஆராய்ச்சி, வரலாற்று ஆய்வு ஆகியன இவர் விரும்பிய துறைகள். ஆராய்ச்சிக் கலைஞர் (மதுரை), சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர் (திருவாவடுதுறை), சைவ இலக்கியப் பேரறிஞர் (தருமை) என்ற பட்டங்களை ஆதீனங்கள் அளித்துப் பாராட்டியுள்ளன. இலங்கை, மலேசியா ஆகிய அயல்நாடுகளுக்குச் சென்று தமிழைப் பரப்பி வளர்த்தவர்.

பண்டைத் தமிழர் நாகரிகத்தையும் அவர்தம் மொழிச் செழுமையையும் இராசமாணிக்கனார் நூல்கள் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995