Skip to content

டாக்டர் எஸ்.எம்.டயஸ், ஐ.பி.எஸ்.,

டாக்டர் எஸ்.எம்.டயஸ், .பி.எஸ்., (04.12.1919 – 2000)

திரு எஸ்.எம். டயஸ் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பேட்டில் பிறந்தவர். திருச்சி செயின்ஜோசப் கல்லூரியில் கணிதவியலில் பட்டம் பெற்றவர். சிலகாலம் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். டேராடூனில் உள்ள இராணுவக் கல்லூரியில் (1940-1949) பயின்றவர். இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் தகுதிமிகுதி பெற்றிருந்த இவர் .பி.எஸ். (IPS) அதிகாரியாகச் சிறப்புக் காவல்படையில் பணியில் சேர்ந்தார்.

சிவகாசி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய ஊர்களில் இரகசியப் பிரிவில் (CID) பணியாற்றினார். 1974இல் தேசியக் காவல் பிரிவில் (National Police Academe) இணைந்து மௌன்ட் அபுவில் (Mount Abu) பணியாற்றினார்.

தமிழகத்தின் மேனாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மேனாள் அமைச்சர் கக்கன் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். சிறந்த நிர்வாகத் திறனும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்கவர். இந்தியக் குடியரசுத் தலைவரின் விருதினைப் பெற்றப் பெருமைக்கு உரியவர்.

மௌன்ட் அபுவில் இருந்த காவலர் பயிற்சி நிறுவனத்தைப் பெருமுயற்சி எடுத்து தென்னிந்தியர்களின் நலனுக்காக ஐதராபாத்திற்கு மாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையிலும் குற்றவியல் துறையிலும் விரிவுரைகள் பல ஆற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் (Criminology) துறை உருவாவதற்குக் காரணமாக இருந்தவர் எனக் கூறலாம்.

தனது 72ஆவது வயதில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவர் பெயரால் ஒரு அரங்கம் (Diaz Hall) உள்ளது. பத்தாண்டுகள் உழைத்து திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவரின் மொழிபெயர்ப்பை அறிஞர் பலர் பாராட்டியுள்ளனர். வர்த்தமானன் பதிப்பகம், மூன்று பெருந்தொகுதிகளாக இம்மொழிபெயர்ப்பினை வெளியிட்டுள்ளது.

சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரில் அமைந்துள்ள காவலர் இயக்ககத்தில் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று பணியாற்றியவர்.

சுருக்கமும் ஆற்றலும் கொண்ட வள்ளுவனார் வாய்மொழி எனும் பொருளமைந்த (The Aphorisms of Valluvar) நூலினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.

உயர் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுவதற்கு இவர் முன்னர் தலைமைப் பொறுப்பில் இருந்த ஐதராபாத்தின் காவலர் பயிற்சி நிறுவனத்திற்குச் சென்றபோது அங்கு இயற்கை எய்தினார்.

நேர்மை, நிர்வாகத் திறமை, ஆளுமைத்திறம், ஆங்கிலப் புலமைநலம், மொழிபெயர்ப்புத்திறன், பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்க திரு. எஸ்.எம். டயஸ் IPS அவர்கள் 2000ஆம் ஆண்டு மறைந்தார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995