Skip to content

சி.ைனார் முஹம்மது

சி.ைனார் முஹம்மது (1929 – 2014)

1929 ஆம் ஆண்டு பிறந்த இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 32 ஆண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராகவும் 1980களில் இருந்து நான்காண்டுகள் அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகப் பணி செய்தார். தமிழறிஞர்கள் கி..பெ.விசுவநாதம் அவர்களுடன் இணைந்து தமிழகப் புலவர் குழுவினைத் தோற்றுவித்து 28 ஆண்டுகள் அதன் செயலாளராகத் தொண்டாற்றினார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தைத் தொடங்கிப் பன்னாட்டு இலக்கிய மாநாடுகளை ஐந்து முறை நடத்தினார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை இதன் வழியாகப் கொண்டு வந்தார். திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தின் பெரும் புள்ளியாக இருந்தவர். தன் வாழ்நாளின் இறுதிவரை அதன் துணை அமைச்சராக இயங்கியவர்.

1974இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கு பெற்று உரையாற்றினார். தமிழ்ச்செம்மல், திருக்குறள் நெறி தொண்டர், திருக்குறள் ஞாயிறு, பெரும்புலவர் முதலான விருதுகள் மற்றும் பட்டங்களை முறையே மதுரைப் பல்கலைக்கழகம், உலகத் திருக்குறள் பேரவை மற்றும் குன்றக்குடி அடிகளார் மூலம் பெற்றுச் சிறப்பிக்கப் பெற்றவர்.

தமிழ் செம்மல் விருது (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), திருக்குறள் நெறித் தொண்டர் (உலகத் திருக்குறள் பேரவை), குறள் ஞாயிறு (உலகத் திருக்குறள் பேரவை), பெரும்புலவர் (குன்றக்குடி அடிகள் வழங்கியது) ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

தாயுமானவர், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் ஓர் ஒப்பாய்வு என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வேடு, இது ஆய்வு நூலாக வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்றது. வாழும் காலத்தில் செல்வாக்குமிக்கவராகவும் வாழ்ந்தவர். தமிழகத்தில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட பெரும் பேராசிரியராக இருந்தவர். இவர் தனது 85ஆவது அகவையில் ஐக்கிய அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் 23.07.2014 ஆம் நாளன்று மறைந்தார். இவருக்கு அசீனா என்ற மனைவியும் நான்கு  மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995