Skip to content

க.த.திருநாவுக்கரசு

..திருநாவுக்கரசு (20.11.1931- 05.05.1989)

செங்கல்பட்டு, மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி கிராமத்தில் திரு தருமலிங்க முதலியாருக்கும், திருமதி ருக்மணி அம்மையாருக்கும் 20-11-1931இல் பேராசிரியர் ..திருநாவுக்கரசு அவர்கள் பிறந்தார். பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம் வரை சென்னையில் வாழ்ந்தார்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 1954ஆம் ஆண்டு தமிழ் முதுகலையில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றார். புதுக்கோட்டை, சென்னை மாநிலக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகிய இடங்களில் பணியாற்றினார். 1969ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்விருக்கையில் பணியாற்றினார். அப்பொழுது அவர் எழுதிய திருக்குறள் நீதி இலக்கியம் (1971) எனும் நூலுக்குச் சாகித்திய அகாடெமி விருது (1974) கிடைத்தது. 1972ஆம் ஆண்டு முதல் தம் இறுதிக்காலம் வரை (05-05-1989) ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார்.

உலகத் தமிழாய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியில் இருக்கும்போதே, இயக்குநர் நாற்காலியில் அமர்ந்தநிலையில் உயிர் துறந்தார். தமது 58ஆவது வயதில் பணியில் இருக்குபோதே, பணி செய்துகொண்டே மறைந்த தமிழறிஞர் இவர்.

பேராசிரியர் .. திருநாவுக்கரசு அவர்கள் பல்துறை அறிஞர். புலமை நலம் மிக்கவர். இவர் படைத்த நாற்பது நூல்களும் ஆராய்ச்சி நூல்கள் எனக்கூறலாம். வரலாறு சார்ந்தவை (6), தொல்லியல் சார்ந்தவை (2), திருக்குறள் ஆய்வுகள் சார்ந்தவை (4), கட்டுரைத் தொகுப்பு (3), இக்கால இலக்கியம் (2), தனிமனித வாழ்க்கை வரலாறு (3), நூலடைவுகள் (4), ஒப்பாய்வு (2), மொழிபெயர்ப்பு (5), மொழியியல் (2), நாடகம் (2), பதிப்புகள் (7) எனப் பல்துறையிலும் நுண்மாண் நுழைபுலத்தோடு நூல்களை எழுதிய தமிழ் அறிஞர். 45 நூல்களுக்கும் மேலாக எழுதியவர். எத்தலைப்பு பற்றியும் எக்குறிப்பும் இல்லாமல் பேசும் ஆற்றலும் அறிவுத் திறமும் மிக்கவர்.

பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் இவரை நடமாடும் நூலகம் எனப் புகழ்ந்துரைக்கிறார். பத்துமாதங்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உயர்நிலை ஆய்வாளராக நான், (1983-1984) பணிபுரிந்தபோது இவரின் அன்பைப் பெற்றேன். 1979ஆம் ஆண்டு என் முனைவர்பட்ட ஆய்வு தொடர்பாக இவரை இவரின் கோட்டூர்புர இல்லத்தில் சந்தித்தபோது, காலை 10மணி முதல் மதியம் 1மணி வரை கருத்துமழைப் பொழிந்தார். கண்களை மூடிக்கொண்டு, அருவிபோலச் சொற்பெருக்கு ஆற்றிக்கொண்டே இருந்தார். நானும் எழுதிக்கொண்டே இருந்தேன். அறுபது பக்கங்களுக்குமேல் எழுதி எழுதி கை சோர்ந்தேன். உண்மையிலேயே இவர் நடமாடும் நூலகம்தான் என்பதை உணர்ந்தேன்.

பலமுறை சந்தித்துப் பேசியதும் கூட்டங்கள் பலவற்றிற்கு இவரை அழைத்துச் சென்றதும் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக நிற்கின்றது.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995