Skip to content

கோவை இளஞ்சேரன்

கோவை இளஞ்சேரன் (04.01.1923 – 17.10.1999)

இராமநாதபுரம் மாவட்டம் கல்லல் எனும் ஊரில் பிறந்தவர். கோ. வைத்தியலிங்கம், மீனாட்சியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். தந்தையாரின் பெயரில் உள்ள இரு எழுத்துகளைச் சேர்த்துகோவைஎனத் தனது முன்னெழுத்தாக வைத்துக்கொண்டார். கோயம்புத்தூருக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவர் பெரும்பகுதி வாழ்ந்தது தஞ்சையில்.

ஐயாறு அரசினர் கல்லூரியில் பயின்றவர். நாகை தென்னிந்திய திருச்சபை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிப் பணிநிறைவு பெற்றவர். பணிநிறைவுக்குப் பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். நாகையில் தமிழ்ச் சங்கம் தோற்றுவித்து மறைமலையடிகளுக்கு வெண்கலச் சிலையை நிறுவியவர். தமிழையே மூச்சாகக் கொண்டவர். சமூகமொழிச் சீர்திருத்தக் கொள்கையர். மரபுக் கவிஞர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர். குறிப்பாக பேராசிரியர் .அன்பழகன் அவர்களுடனும் மேனாள் அமைச்சர் மன்னை நாராயணசாமி அவர்களுடனும் நெருக்கமாக இருந்தவர். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வுக்குழுவின் தேர்வாளராக (1989) இருந்தவர்.

கோவை இளஞ்சேரன் கவிதைகள் தொகுதி I, & II, வள்ளுவர் வாழ்த்து, நகைச்சுவை நாடகங்கள், குறள் நானூறு, முல்லை மணக்கிறது, பாரதியின் இலக்கியப் பார்வை, புதையலும் பேழையும், பட்டிமன்ற வரலாறு, அறிவியல் திருவள்ளுவம், இலக்கியம் ஒரு பூக்காடு, பகுத்தறிவு முனை முதலான 17 நூல்களை எழுதியவர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.

இவரது கவிதையின் சிறப்பினைப் பேரறிஞர் அண்ணா, கவியோகி சுத்தானந்த பாரதி, தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதன் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இள. நீலவாணன், இள. சேரலாதன் என இவருக்கு இரு மைந்தர். 2008-2009 ஆம் ஆண்டில் இவருடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பெற்றன.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995