Skip to content

ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

ஆர். பாலகிருஷ்ணன் ..எஸ் (28.11.1958)

திருமதி ஆர். தனலெட்சுமி, திரு . ரெங்கராஜு இணையருக்கு 28-11-1958 அன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எனும் ஊரில் ஆர். பாலகிருஷ்ணன் பிறந்தார்.

இந்தியவியல் துறையில் 30 ஆண்டுகாலமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திராவிட மொழிக் குடும்பத்தின் தோற்றம், தமிழர்களின் முற்கால வரலாறு, தமிழ்த் தொன்மத் தோற்றம், சிந்துவெளிப் பண்பாடு, கீழடி சிக்கல்கள் ஆகியவற்றைத் தனது களமாகக் கொண்டு ஆராய்ந்துவருபவர்.

ஆபாட் படசின்ஹா என்ற இவரது ஒடியா மொழிபெயர்ப்பு நூல் ஒடிசாவின் முற்கால வரலாறு கொண்டது. இவரது சிந்துவெளி ஆய்வுகள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் வெளியிடப்பட்டது. அன்புள்ள அம்மா (1991), சிறகுக்குள் வானம் (2012), நாட்டுக்குறள் (2016), சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் (2016), பன்மாயக் கள்வன் (2018), இரண்டாம் சுற்று (2018), குன்றென நிமிர்ந்து நில் (2018), Journey of A Civilization – Indus to Vaigai (2019), கடவுள் ஆயினும் ஆக (2021) ஆபாட் படசின்ஹா (Aabaddh Padachinha) ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறள் காமத்துப்பாலை அடிப்படையாகக் கொண்டு நாட்டுக்குறள் இசைப்பா தொகுப்பை வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியங்களில் தங்கச்சுரங்கம் என்ற பெயரில் 30 இணைய உரைகளை நிகழ்த்தியுள்ளார்.

முப்பத்து நான்கு ஆண்டுகள் குடிமைப் பணியிலும், மற்றும் தேர்தல் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றிலும் பணியாற்றியவர். இந்திய ஆட்சிப் பணியாளராக ஒடிசாவில் பணியாற்றிய இவர் தற்போது ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். மேலும் சிந்துவெளி ஆய்வு மையத்திலும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும் மதிப்புறு ஆலோசகராக இருந்து வருகிறார். தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இவருக்கு 2017 ஆம் ஆண்டு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும் கலைஞர் பொற்கிழி விருது, செம்மொழி ஞாயிறு விருது, விகடன் டாப் 10 மனிதர் ஆகிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995