Skip to content

அறிஞர் நெ. து. சுந்தரவடிவேலு

அறிஞர் நெ. து. சுந்தரவடிவேலு (12.10.1912 – 12.04.1993)

செங்கல்பட்டு மாவட்டம், நெய்யாடுபாக்கத்தில் பிறந்தவர். துரைசாமிசாரதாம்பாள் இணையருக்கு மகனாகத் தோன்றியவர். மாநிலக் கல்லூரியில் பயின்றவர். மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளிப் பொதுக்கல்வி இயக்குநர் என உயர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருமுறை இருந்தவர். தந்தை பெரியாரின் பேரியக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவர்.

பொதுவுடைமைக் கருத்துகளில் ஊற்றம் கொண்டவர். பகுத்தறிவாளர். கலப்பு மணம் செய்து கொண்டவர். பள்ளிச்சீருடை, மதிய உணவுத் திட்டம் முதலியவற்றைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியவர். பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்கவர். அயல்நாடுகள் பலவற்றிற்கும் சென்று வந்தவர். இந்திய ஒன்றிய அரசின் தாமரைத்திரு விருது (பத்மஸ்ரீ விருது – 1961) பெற்றவர். இவரின் ஒரே மகன் கா.சு. திருவள்ளுவன் பள்ளியில் பயிலும்போதே மறைந்தது இவருக்குப் பேரிழப்பினைத் தந்தது.

எண்ண அலைகள், வாழ்விக்க வந்த பாரதி, வள்ளுவர் வாய்மொழி, ஊருக்கு நல்லது, நினைவில் நிற்பவர்கள், நினைவலைகள் (மூன்று தொகுதிகள்), பிரிட்டனில், புதிய ஜெர்மனியில், சிங்காரவேலரும் பகுத்தறிவும், கல்வி வள்ளல் காமராசர், புரட்சியாளர் பெரியார், உழவர் எழுத்தறிவுத் திட்டம், உலகத் தமிழ் என 51 நூல்களை எழுதியுள்ளார்.

பொது நூலக இயக்குநராகவும் பொறுப்பேற்று 400க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களை உருவாக்கியப் பெருமைக்குரியவர். மாலைநேரக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தியவர். பகுத்தறிவுத் தந்தை பெரியாரைப் பற்றிச் சிறப்பான நூல் எழுதியவர். சிறுவர்களுக்குப் பயன்படும் வகையில் வள்ளுவர் வரிசை எனும் தலைப்பில் பதிமூன்று நூல்களை எழுதியவர். இவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டின் முதல்வர்கள் நால்வரின் அன்பைப் பெற்றவர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995