Skip to content

அருள்திரு தனிநாயகம் அடிகளார்

அருள்திரு தனிநாயகம் அடிகளார் (02.08.1913 – 01.09.1980)

செசில் இராசம்மா, வஸ்தியாம்பிள்ளை ஹென்றி ஸ்தனிஸ்லாஸ் கணபதிப்பிள்ளை இணையரின் மகனாக 02.08.1913 அன்று இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கரம்பொன் எனும் ஊரில் பிறந்தார். சேவியர் என்பது தனிநாயகம் அடிகளாரின் பெற்றோர் இவருக்கு இட்டபெயர். லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நூலை 15 வயதில் படித்தார். அதன்மூலம் வாழ்க்கை சமயம், கல்வி, சேவையில் ஈடுபட்டது.

பள்ளியில் தமிழ் பயின்றார். ஆங்கிலத்தில் ஆர்வம் மிக்கு இருந்தது. 1923-1930 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் Bottled sunshine மலரின் ஆசிரியராக இருந்தார். ஆங்கிலக் கட்டுரைகள் எழுதினார். 1931 -1934 வரை கொழும்புவில் மெய்யியல் பயின்றார். புனைப்பெயரில் ஆங்கிலத்தில் 11 கட்டுரைகள் எழுதினார். 1934 இல் கேரள மாநிலப் பேராயர் இலங்கை சென்றபோது அவருடன் தொடர்பு கொண்டு திருவனந்தபுரம் மறை மாநிலம் வந்துசேர்ந்தார். உர்பன் பல்கலையில் சமயவியல் பயின்றார்.

இத்தாலி, ஸ்பானிஷ், போர்த்துகீசியம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், எபிரேயம் முதலான மொழிகள் பயின்றார். உர்பனில் தமிழ் மாணவர்களுடன் இணைந்துவீரமாமுனிவர் தமிழ்ச் சங்கம்நிறுவினார். துணைத் தலைமை ஆசிரியராக 1940-1945களில் வடக்கன்குளம் புனித தெரசாள் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தார். அவ்வூரின் பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயரிடம் நான்காண்டுகள் தமிழ் பயின்றார். அடிகளார் தமிழ் பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும் என்றபோது நெடுந்தீவில் குடியேறிய தனிநாயக முதலி பரம்பரையில் தோன்றியவர் என்பதால் தனிநாயகம் என்று தன் பெயரின் பின் சேர்த்துக்கொண்டார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1945இல் சேர்ந்தார். அப்பொழுது துணைவேந்தராக இருந்தவர் எம். இரத்தினசாமி அவர்கள். தமிழ்த்துறைத் தலைவர் தெ.பொ.மீ., பேராசிரியர் சிதம்பரநாதன் ஆகிய இருவரும் இவர்பால் மிகுந்த அன்பு கொண்டனர்.

தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்பனவற்றிலும் தமிழ் கல்ச்சர் என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராக இருந்தார். 1949இல் முதுநிலைப் பட்டம் பெற்றார். பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்ற பொருளில் ஆய்வு செய்தார். அது 1952இல் தமிழ் இலக்கிய கழகத்தால் வெளியிடப்பட்டது.

1948இல் தமிழ் இலக்கியக் கழகம் நிறுவினார். உயர்நிலை தமிழ் ஆராய்ச்சிக் கழகம் நிறுவத் திட்டமிட்டார். அது செயல்வடிவம் பெறவில்லை. 137க்கும் மேற்பட்ட ஆய்வுகள், தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் வெளிவந்தன. 1980 மே திங்களில் வேலணையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு பேராசிரியர் கா.பொ.இரத்தினம் எழுதிய தமிழ்மறை விருந்து எனும் நூலை வெளியிட்டு உரையாற்றினார். 01.09. 1980 அன்று மறைந்தார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995