Skip to content

பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி

பேராசிரியர் டாக்டர் .சஞ்சீவி (02.05.1927 – 22.08.1988)

பேராசிரியர் டாக்டர் .சஞ்சீவி அவர்கள் திருச்சியில் பிறந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பணியைத் தொடங்கிய இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், இணைப் பேராசிரியர், பேராசிரியர், துறைத் தலைவர் என உயர்ந்தவர். 1974 – 1976 ஆகிய இரு கல்வியாண்டுகளில் தமிழ் முதுகலையில் இலக்கியத் திறனாய்வு பாடத்தினை வாரம் ஒரு முறை கேட்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அதன்பிறகு 1976 இல் அன்றைய துணைவேந்தர் மால்கம் ஆதிசேஷய்யா அவர்கள் தொடங்கிய ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டத்தின் முதல் அணி மாணவராக இவரிடம் சேர்ந்து பாடங்கேட்கும் வாய்ப்பினைப் பெற்றேன். நாள்தோறும் தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ஆங்கில நாளிதழ்களைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு வகுப்பிற்கு வரவேண்டும். பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரைப் பிள்ளை அவர்கள் எழுதிய ஆங்கிலத் தமிழ் அகராதியைக் கையில் வைத்திருக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் கேள்வி கேட்பார். இப்படிப் பேராசிரியர் .சஞ்சீவியோடு பல மலரும் நினைவுகள் எனக்கு உண்டு.

சங்ககாலச் சான்றோர்கள், மானங் காத்த மருதுபாண்டியர், மருதிருவர், வீரத்தலைவர் பூலித்தேவர், இருபெரும் தலைவர்கள், வேலூர் புரட்சி, கும்மாந்தான் கான் சாகிபு, வெள்ளையர் கண்ட தமிழ் வீரம், விடுதலை இயக்க வரலாறு, வெள்ளை ஆதிக்க வரலாறு, போரும் வேலும் போன்ற வரலாற்று நூல்களை எழுதியவர். ‘இலக்கிய இயல் எனும் நூல் நான் மாணவராக இருந்தபோது அவர் வெளியிட்ட திறனாய்வு நூல். கால்டுவெல் இயற்றிய History of Tinnaveli எனும் நூலைத் தென்பாண்டித் திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு எனும் தலைப்பில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் முந்நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர்.  தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது நான்கு பெரும் கருத்தரங்குகள் நடத்திப் பின்வரும் நான்கு நூல்களைப் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்துள்ளார்.

  1. First all India Tirukkural Research Seminar papers – 1972

(கருத்தரங்கம் நடந்தது மே1972, நூலாக வெளிவந்தது 1973)

  1. பல்கலைப் பழந்தமிழ் – 1974
  2. பெருங்காப்பியச் சிற்றிலக்கியப் பெருந்தமிழ் – 1975
  3. தெய்வத் தமிழ் 1975.

ஒப்பு நோக்குக, உற்று நோக்குக என்பதை மந்திர மொழியாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆய்வே தொழில், தொண்டு, தொழுகையாகக் கொண்டு ஒழுகிய தமிழ்த்தொண்டர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995