Skip to content

தமிழ் இறையனார்- திருவள்ளுவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

 

தமிழ் இறையனார்- திருவள்ளுவர்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பெண்கள் இயல், இசை, கூத்து என்னும் மூன்று தமிழிலும் வல்லவர்களாக விளங்க வேண்டும் என்பது பாரதிதாசனின் எண்ணம். அதை, அவர் பெற்றோரின் ஆவலாக இந்த இசைப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? – நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? – கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?

(துன்பம்)

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வின் உணர்வு சேர்க்க – எம்
வாழ்வின் உணர்வு சேர்க்க – நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

(துன்பம்)

அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது – யாம்
அறிகிலாத போது – தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா?

(துன்பம்)

புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் – தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் – நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
செல்வம் ஆக மாட்டாயா?

(துன்பம்)
(இசையமுது,‘பெற்றோர் ஆவல்’)

https://youtu.be/q-Gyxps_qYo?si=sGE3byG8GEWxNa6j